சம்பூர் கைத்தொழில் பேட்டை
மூலம் அப்பிரதேச மக்களே அதிக நன்மை அடைய உள்ளனர். இதனூடாக 10 ஆயிரம் இளைஞர்
யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு கிட்ட உள்ளது. தமிழ் மக்கள் மீது தமிழ்த்
தேசிய கூட்டமைப்பிற்கு உண்மையான பற்று இருந்தால் இவ்வாறான அபிவிருத்திகள்
தொடர்பில் தவறான குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்த வேண்டும் என
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.
நேற்று பாராளுமன்றத்தில்
உரையாற்றிய அவர், முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை வழங்குவதினூடாகவே அவர்கள்
இங்கு முதலிட முன்வருவர். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள்
முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிப்பு வழங் கியதால் அங்கு முதலீடுகள் அதிகரித்து
வளர்ச்சி ஏற்பட்டது.
சம்பூர் தொழிற்பேட்டை பாரிய
நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட உள்ளது. இதனூடாக அப்பகுதி இளைஞர் யுவதிகள்
10 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. 10 ஆயிரம்
குடும்பங்களின் வாழ்வில் மலர்ச்சி ஏற்பட உள்ளது.
ஆனால் சம்பூர் தொழில் பேட்டை
குறித்து எதிர்க் கட்சிகள் தேவையற்ற விமர்சனங்களை செய்கின்றன. அபிவிருத்தி
என்ற பெயரில் தமிழ் பிரதேசங்களை கைப்பற்றுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு
குற்றஞ்சாட்டி வருகிறது. தொழிற்பேட்டை அமைக்க வாய்ப்பான உகந்த பகுதி
என்பதாலே சம்பூர் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இறங்குதுறை அமைப்பதற்கு
கடலை அண்டிய பகுதி தேவை.
மட்டக்களப்பு மாவட்டம் கடந்த
6 வருட காலத்தில் பாரிய அபிவிருத்தி கண்டு வருகிறது. இங்கு பாரிய மாற்றம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான பாரிய முன்னேற்றங்களை ஏற்படுத்தியது
தொடர்பில் ஜனாதிபதியின் பெயர் வரலாற்றில் பதியப்படுவது உறுதி.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
ஆட்சியிலே வீதிப் போக்குவரத்தில் பாரிய வளர்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால்
எதிர்க் கட்சிகள் தேவையற்ற விமர்சனங்களை மேற்கொள்கின்றன.
சம்பூர் பிரதேசத்திலுள்ள
1272 குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்றி வருகிறோம். 342 குடும்பங்கள்
முகாம்களில் உள்ளதோடு அவர்களுக்கு சொந்த நிலங்கள் வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு காணி வழங்கி வீடுகள் கட்டப்பட்டு
வருகிறது. இந்த அபிவிருத்தியினூடாக சம்பூர் பிரதேச மக்களே அதிகம் நன்மை
அடைய உள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் மீது உண்மையில் பற்று இருந்தால் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தமாட்டார்கள்.
இலங்கைக்கு வருகை தந்த
நவநீதம்பிள்ளை புலிகள் பயங்கரவாத அமைப்பு என சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் இலங்கையில் இடம்பெறும் சிறப்பான மாற்றங்கள் குறித்து அவர்
உணர்ந்துகொள்வார்.
நாட்டில் இடம்பெறும் முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து வடக்கு கிழக்கு பிரதேச மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.